ஆட்டோ மீட்டரை திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னை பெருநகரில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் ஓடுகின்றன.

ஆட்டோக்களுக்கு தமிழக அரசு, புதிய திருத்திய கட்டணத்தை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி அறிவித்து, அன்றைய தினமே அமலுக்கு கொண்டு வந்தது. அதே போல், திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டண விவர அட்டை செப்டம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் தங்கள் மீட்டரில் விரைவில் புதிய கட்டணத்திற்கு திருத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பொதுமக்களிடம் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் இயக்க வேண்டும். தவறினால் துறை ரீதியாக அனுமதி ரத்து, ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை மாநகர் முழுவதும் முறையான அனுமதி, தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்குவது, ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், கட்டண அட்டை இல்லாமலும், மீட்டர் இல்லாமலும் இயக்குபவர்களை கண்காணிக்க 12 குழுக்களாக பிரிந்து அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஆனால் ஆட்டோ மீட்டரை திருத்தம் செய்ய அதிக நாட்கள் ஆவதால், தமிழக அரசும் ஆட்டோ டிரைவர்களின் நலனை கருத்த்தில் கொண்டு அவர்களுக்கு காலக்கெடு கொடுத்து வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந் தேதி வரை ஒரு மாத காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இனிமேல் ஆட்டோ உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மீட்டரை திருத்தம் செய்யாமலோ அல்லது மீட்டர் கட்டணம் பொருத்தாமலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply