இன்று மே தினம். தமிழக தலைவர்கள் வாழ்த்து

may dayஇன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் எனப்படும் மே தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினத்தை முன்னிட்டு தமிழக தலைவர்கள் உழைப்பாளர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடல் உழைப்பு என்பதனையே மூலதனமாகக் கொண்டு, அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியத்தினையே தம் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி, உழைப்பால் வாழ்ந்தனரா? உழைப்புக்காகவே வாழ்ந்தனரா? என்று ஐயப்படும் அளவுக்கு உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் முதலாளிகளின் பிடியில் சிக்கி, உயிர் வாழ்கின்ற ஒரு உரிமை தவிர, பெரும்பாலான பிற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடங்கி, ஒடுங்கிக்கிடந்த தொழிலாளர்கள், ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பாளரின் உரிமையையும், உடல் உழைப்பின் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உயர் தினமாகவும் ‘மே தினத்’ திருநாள் விளங்குகிறது.

கருணாநிதி: உடலுழைப்பால் உலகுக்கு வளம் சேர்க்கும் தொழிலாளர் சமுதாயத்தினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த மே தின வாழ்த்துகள். வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்குத் தொண்டனாகவும் திகழும் தொழிலாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): உழைக்கும் மக்களின் உரிமைகள், நலன்கள் பேணப்பட வேண்டும். தொழிலாளர்களின் வாழ்விலும், வளத்திலும் மத்திய, மாநில அரசுகள் தனி அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளும் விண்ணப்பங்களும் மனிதாபிமானத்துடன் ஆய்வு செய்யப்பட்டு விரைவான தீர்வு காண வேண்டும்.

வைகோ (மதிமுக): தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மீண்டும் அரங்கேற்றும் விதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கோரக் கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி, தண்டிக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.

ராமதாஸ் (பாமக): தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. நிலம் கையகச் சட்டம், புதிய ஓய்வூதியச் சட்டம் போன்றவை தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பவையாக உள்ளன. இந்த அவலங்களைப் போக்கி, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாமக தொடர்ந்து பாடுபடும்.

விஜயகாந்த் (தேமுதிக): தமிழகத்தில் உள்ள பல வகையான தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட தேமுதிக தொழிற்சங்க பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் தோளோடு தோள் கொடுப்போம். மே தின வாழ்த்துகள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட கம்யூனிஸ்ட் அளப்பரிய தியாகத்தை விலையாகக் கொடுத்தது. இந்த பாரம்பரிய உத்வேகத்துடன் தற்போதும் பிரச்னைகளை எதிர்கொள்ள சபதம் ஏற்போம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மோடி அரசாங்கம் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து, விவசாயிகளின் விளை நிலங்களை இஷ்டம் போல் ஆக்கிரமித்துக் கொள்ள முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. எல்லாவித சுரண்டல்களிலிருந்தும் விடுபட்டு, எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கிற மகிழ்ச்சிகரமான, வளம் நிறைந்த புதிய உலகத்தைப் படைப்போம்.

இளங்கோவன் (காங்கிரஸ்): கடந்த 10 மாதங்களாக மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் விரோதப் போக்குக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒன்று திரள வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடும் உன்னதத் திருநாள் மே நாள் ஆகும். தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்திக்கவும், அவர்களின் உரிமைக்குப் போராட இந்த நாளில் உறுதியேற்போம்

Leave a Reply