இன்று அன்னையர் தினம்,. அன்னைக்கு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

13அம்மா…. உயிர்தந்து, உடல் தந்து நம்மை உலகுக்கு தந்த படைக்கும் கடவுள். அவள்தான் எல்லாம். கடவுளை நேரில் பார்ப்பதில்லை. கடவுளாய் நம் முன் நடமாடி கொண்டிருப்பவர் தாய். அந்த தாயை போற்றி கவுரவிக்கும் அன்னையர் தினம் இன்று!

காதலர் தினம், நண்பர்கள் தினம் என்று ஆண்டு முழுவதும் பல தினங்களை உலகம் பார்க்கிறது. ஆனால் மே–2–வது ஞாயிற்றுக்கிழமை வரும் அன்னையர் தினத்தை உலகமே கொண்டாடி மகிழ்கிறது. பல பருவங்களை கடந்து வரும் பெண் தாய்மை பருவத்தை அடைந்ததும் தனது விருப்பங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் துறக்கிறார். ‘எல்லாமே பிள்ளைதான்’ என்றாகி விடுகிறாள்.

ஆடையில் எங்காவது சிறு அழுக்கு பட்டால் கூட அசிங்கமாக கருதியவள்…. அடுத்தவர் கை வைத்த தம்ளரில் தண்ணீர் குடிப்பதை கூட அருவெறுப்பாக நினைத்தவள்…. தாயாய் வரும் போது கட்டிய பட்டு சேலையில் தன் பிள்ளை சிறுநீர் கழித்தால் கூட அதை பன்னீராய் ஏற்கிறாள். மூக்கொழுக மழலை கையால் அளைந்து தன் பிள்ளை விளையாடிய எச்சில் சோற்றை அமிழ்தமாய் தின்று மகிழ்கிறாள்.

பிள்ளைக்கு வலித்தால் தானும் வலியில் தவிப்பாள். பசித்தால் அவளும் துடித்து போகிறாள். உதிரத்தை பாலாக்கி ஊட்டுகிறாள். வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைத்து வளர்க்கிறாள். மூச்சுக்காற்று அடங்கும் வரை தன் பிள்ளை… தன் பிள்ளை என்ற எண்ணத்திலேயே வாழ்கிறாள். காலம் முழுவதும் தனக்காக வாழாமல் தன் பிள்ளைகளுக்காக வாழும் தாய் பவித்திரமானவள். அவளது அன்பு பவித்திரமானது. எனவேதான் தாயின் பாசத்தையும், அன்பையும் நினைத்த மாத்திரத்திலேயே கண்ணில் நீர் பெருகிவிடுகிறது.

தெய்வத்தையும் தாண்டி அவள் மீது தனி மரியாதை வருகிறது. காலையில் வீட்டை விட்டு புறப்படும் போது அம்மாவின் காலை தொட்டு வணங்கிவிட்டு செல்லும் பழக்கம் பெரும்பாலான குடும்பங்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பேரன், பேத்தி எடுத்த பிறகும் அம்மா அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் ‘அம்மா, அம்மா’ என்று தினமும் அழைத்து மகிழ்கிறார்கள். பத்து காசு மிட்டாய், கட்டுவதற்கு ஒரு கண்டாங்கி சேலை… என்று பிள்ளைகள் தங்கள் உழைப்பில் வசதிக்கேற்ப வாங்கி கொடுக்கும் பரிசுகளால் தாய் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படிப்பட்ட அன்பு அம்மா மறைந்த பிறகும் கூட அவள் மீதான அன்பு மாறாது… மறையாது…

அன்னையர் தினமான இன்று அன்பு அம்மாக்களுக்கு பிள்ளைகள் பரிசுகளை வாங்கி கொடுத்து அம்மாக்களின் அன்பு முத்தத்தை பெற்று மகிழ்ந்தார்கள். தமிழ் சினிமாவில் கூட அம்மா ரோல்களுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. இந்த கால சினிமாவில் அம்மா வேடம் என்றால் நம் கண்முன் வந்து நிற்பவர் சரண்யா பொன்வண்ணன்தான். அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்தில் அம்மா–பிள்ளை உறவுகளை தத்ரூபமாகவே நினைவில் கொண்டு வந்து நிறுத்துவார். 2 மகள்களுக்கு தாயான சரண்யாவுக்கு ஆண்டு தோறும் அன்னையர் தினத்தில் வாழ்த்து அட்டைகளை பரிசாக கொடுத்து மகள்கள் அசத்துகிறார்களாம். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும், எந்த வேலையில் இருந்தாலும் பிள்ளைகளை பற்றிய நினைவுகள் ஓடிவரும் என்று சொல்லும் போது சரண்யாவின் தாய்மை மிளிர்கிறது.

Leave a Reply