இன்று திரிபுராவில் தேர்தல்: 25 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா கம்யூனிஸ்ட்?
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பாஜகவுக்கும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் இந்தியாவில் ஒருசில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட்ட பாஜக, திரிபுராவிலும் ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் தீவிராமாக பிரச்சாரம் மேற்கொண்டன.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல் பாஜக 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் இம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.