பெங்களூரு அருகேயுள்ள தனியார் சுங்கச்சாவடி ஒன்றை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் அருகேயுள்ள ஹொசக்கோட்டை என்ற கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியே வாகனத்தில் சென்ற குட்டநல்லூர் நகராட்சி உறுப்பினர் நாராயணசாமி என்பவர் தான் நகராட்சி உறுப்பினர் என்பதால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று வாதாடினார். ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமியின் மகன் மஞ்சுநாத் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மஞ்சுநாத்தை உருட்டுக்கட்டையால் அடித்து துரத்தினர். நகராட்சி உறுப்பினர் மகன் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்திய பொதுமக்கள் அந்த சுங்கச்சாவடியை தீ வைத்து கொளுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் ஆனது. இந்த சம்பவம் தொடர்பாக ஹொசக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதன் அடிப்படையில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 10 பேரை நேற்று கைது செய்தனர்.