தக்காளி…உள்ளே வெளியே

tomato

தக்காளியை காய்கறி லிஸ்ட்டில் வைத்திருக்கிறோம்… ஆனால் அது பழ வகையைச் சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு.

உள்ளே…

  மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் கொலஸ்ட்ரால். தக்காளியில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆன்்டிஆக்சிடன்ட்கள் ‘கொலஸ்ட்ரால்’ உருவாவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

  100 கிராம் தக்காளியில் 18 கலோரிகளே உள்ளன. அதே சமயம் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

  ஒரு கப் தக்காளி சாப்பிட்டால், அன்றைய தினத்துக்குத் தேவையான நார்ச்சத்தில் 7 சதவிகிதம் கிடைத்து விடும். இதில்  வைட்டமின்கள் ஏ, சி, கே, தயாமின், நியாசின், வைட்டமின் பி6, சோடியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் என ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிறைவாக உள்ளன.

  சருமத்தில் ஏற்படும் கருவளையங்கள், சுருக்கங்களுக்குக் காரணமான    ‘ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ பாதிப்பில் இருந்து பாதுகாத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

  தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் இணைந்து, ஆரோக்கியமான எலும்பு கட்டுமானத்துக்கு உதவுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபின்’  (Lycopene) என்ற ரசாயனம் எலும்பு அடர்த்தியாக இருக்க உதவுகிறது.

வெளியே…

  தக்காளிச்சாறு அல்லது துண்டுகளை சருமத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி, சருமத்தைப் பொலிவாக்குகிறது.

  2 டீஸ்பூன் தக்காளிச்சாறு,4 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு இவற்றைக் கலந்து முகத்தில் பூசினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

  தக்காளியில் உள்ள ‘லைக்கோபின்’ ரசாயனம் இயற்கை சன்ஸ்கிரீனாக செயல்பட்டு, சூரியக் கதிரிலிருந்து சருமம் பாதிப்படைவதைத் தடுக்கிறது.

  தேனுடன் தக்காளிச்சாறு கலந்து முகத்தில் பூசி ,15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

  ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் வட்டமாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென மாறும்.

Leave a Reply