அப்துல் கலாம் மறைவு எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனான முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவை அடுத்து நாளை தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும். அதேபோல் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் நேரத்தில் தமிழகம் முழுவதும் மவுன ஊர்வலமும் நடத்தப்படும்.
நாளை கடையடைப்பு நடத்தப்படுவதால், இன்று நடைபெறவிருந்த அந்நிய உணவுகளுக்கு தடை விதிக்கக்கோரிய போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.