பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நாளை முழு அடைப்பு. தேமுதிக, காங்கிரஸ் ஆதரவு. பாமக, தமாக எதிர்ப்பு

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நாளை முழு அடைப்பு. தேமுதிக, காங்கிரஸ் ஆதரவு. பாமக, தமாக எதிர்ப்பு

bandhதமிழகத்தில் மதுவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிர போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. குறிப்பாக காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பின்னர் பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்படும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நாளை  தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நடைபெறும் முழு அடைப்புக்கு தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான தேமுதிக மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது. இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் சந்தேகங்களும் மர்மங்களும் உள்ளதாக அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.

செல்போன் கோபுரத்தில் ஏறும்போது கையில் வைத்திருந்த கயிறுக்கும், காவலர்கள் சசிபெருமாளை கீழே இறக்கியபோது கையிலிருந்த கயிறுக்கும் நிறத்தில் வேறுபாடு இருக்கிறது. சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் இருப்பதையும், பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டதை மட்டுமே தொலைக்காட்சிகள் காட்டின. இவை அனைத்தும் ஏதோ மர்மம் இருப்பதையே காட்டுவதாக அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இந்த சந்தேகங்களை போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சசிபெருமாளின் மரணத்தை கொச்சைப்படுத்தும்விதமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும்.

இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 4-ம் தேதி ( நாளை) நடக்கவுள்ள முழு அடைப்புக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும். இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக மற்றும் தமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”4ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது” எனக் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ”பூரண மதுவிலக்கு பற்றிய கொள்கை, உணர்வை த.மா.கா. மதிக்கின்றது. இருப்பினும், மக்கள், வர்த்தகர்கள் நலன் கருதி கடையடைப்பு போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது.” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply