தென்கொரியாவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற வடகொரிய தூதரக அதிகாரி
வட கொரியாவைச் சேர்ந்த மூத்த தூதரக அதிகாரி ஒருவர், அந்நாட்டின் எதிரி நாடான தென் கொரியாவுக்கு குடும்பத்துடன் தப்பியோடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வடகொரியா கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும் இருநாடுகளிடையே பதட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வட கொரியாவின் துணைத் தூதராக பிரிட்டனில் பணியாற்றிய மூத்த தூதரக அதிகாரி ஒருவர், தென் கொரிய தலைநகர் சியோலுக்கு தனது குடும்பத்துடன் குடியேறிவிட்டதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
லண்டனுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த தே யோங் ஹொ என்பவரே உயர் பதவியில் இருக்கும் வட கொரிய தூதர் ஒருவர் நாட்டை விட்டுச் செல்லும் அதிகாரி என்று நம்பப்படுகிறது.
தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர், பரந்த கொள்கையுடைய ஜனநாயகத்தின் மீது அவர் விருப்பம் கொண்ட அந்த அதிகாரி தனது குடும்பத்தின் நலனுக்காகவும் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வட கொரியா மற்றும் லண்டனில் உள்ள தூதரகங்களில் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டபோது, கருத்து கூற விரும்பவில்லை என்ற பதிலே கிடைத்ததாக கூறப்படுகிறது.