சசிகலா பதவியேற்க கூடாது என டிராபிக் ராமசாமி வழக்கு
எந்த ஒரு பிரச்சனைக்கும் அஞ்சாமல் பொதுநல வழக்குகளை பதிவு செய்து வரும் டிராபிக் ராமசாமி தற்போது சசிகலா முதல்வர் பதவியை ஏற்க கூடாது என்று ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில், கடந்த 5ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்அமைச்சராக வி.கே.சசிகலாவை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வி.கே.சசிகலா முதல்அமைச்சராக பதவி ஏற்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை ஒரு வாரத்துக்குள் பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்துள்ளது. ஒரு வாரத்தில் வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்பட உள்ளதால், சசிகலா முதல்அமைச்சர் பதவியை ஏற்பதை தள்ளிவைக்க வேண்டும்.
இதற்கான மனுவை தமிழக கவர்னர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளேன். எனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா முதல்அமைச்சர் பதவியை ஏற்க கூடாது. இந்த பதவி ஏற்பு விழாவை தள்ளிவைக்கும்படி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.