சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் இன்று கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து கருத்து கூறியுள்ள டிராபிக் ராமசாமி, ஆளும் கட்சியினர் தன்னுடைய உதவியாளரை கொலை செய்ய முயன்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்து திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் பாத்திமா, கும்பகோணத்தில் இருந்து நேற்று காரில் சென்னை வந்தபோது, கார் கடலூர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பாத்திமாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாத்திமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆர்கேநகர் தொகுதியில் டிராபிக் ராமசாமி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை சென்னைக்கு எடுத்து செல்வதற்காக எனக்கு தெரிந்த கார் டிரைவர் கார்த்திக் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, அவர் வேறு ஒரு டிரைவரை அனுப்பி வைத்தார். இந்த டிரைவர் காரை பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ஓட்டு வந்தார். இது குறித்து நான் கேட்டபோது கார் ரிப்பேராகி இருக்கிறது என்று கூறினார். கடலூர் அருகே காரை டிரைவர் நிறுத்தினார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வேகமாக வந்த கார், நான் இருந்த காரில் வேகமாக மோதியது. திட்டமிட்டு என்னை கொல்ல சதி நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
விபத்து குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், “ஆர்கேநகர் தொகுதியில் முதலில் பாத்திமாவைதான் வேட்பாளராக அறிவித்தேன். அப்போது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. தர்மராஜன், ஆர்கேநகர் தொகுதியில் நிற்க கூடாது என்று பாத்திமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், நானே களத்தில் இறங்கினேன். ஜெயலலிதாவை எதிர்க்கும் வேட்பாளர் பாத்திமா என்று அவரை ஆளும் கட்சியில் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஜெயலலிதா போட்டியிடுவதால் அவரை வேட்பாளராக நிறுத்தவில்லை. நானே போட்டியிடுகிறேன். இது ஆளும்கட்சியினருக்கு தெரியவில்லை. அவரை கொலை செய்ய காவல்துறையும், ஆளும்கட்சியினரும் சதி செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளதால் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்க தகுதியே கிடையாது.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைதான் புறக்கணித்து இருக்கிறது. வாக்களிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறவில்லை. அவர்கள் மறைமுகமாக எனக்கு ஆதரவு தருவார்கள். மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாளை மதியம் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்” என்றார்.