முதல்வர் உடல்நிலை குறித்த உண்மையான தகவல் வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

முதல்வர் உடல்நிலை குறித்த உண்மையான தகவல் வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

trafficதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமே அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதவின் உண்மையான மெடிக்கல் ரிப்போர்ட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், அவர் குணமாகி வீடு திரும்பும் வரை இடைக்கால முதல்வரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்

இந்த மனுவில் டிராபிக் ராமசாமி கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏன் என்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதல்-அமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூருக்கும், வெளியிலும் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர். முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளால் பொது அமைதிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.

கடந்த 1-ந்தேதி தமிழக கவர்னர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். அதில், தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன்.

இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

அதேபோல, முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply