பெங்களூர் சிறையா? தலைமை செயலகமா? சசிகலா-அமைச்சர்கள் சந்திப்புக்கு வழக்கு தொடுத்த டிராபிக் ராமசாமி
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை அதிமுக நிர்வாகிகளும், சசிகலாவின் உறவினர்களும் அடிக்கடி சென்று சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அமைச்சர்களும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.
சசிகலாவை சந்திப்பது மட்டுமின்றி அவருடைய ஆலோசனையின் பேரில்தான் ஆட்சி நடத்துவதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூர் சிறை என்ன தமிழக தலைமைச்செயலகமா? அடிக்கடி சென்று ஆலோசனை கேட்பதற்கு என்று கூறி இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்றை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக ஐகோர்ட்டில் பதிவு செய்துள்ளார்
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியான சசிகலாவை தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்திப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மேல் ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் குற்றவாளியுடன் உறவு பாராட்டுவதை அனுமதிக்க முடியாது.
எனவே சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். இதேபோல குற்றவாளியான சசிகலாவை பொது ஊழியரான அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ சந்திக்க அனுமதிக்கக் கூடாது என கர்நாடக சிறைத்துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால் சசிகலாவை எக்காரணம் கொண்டும் தமிழக சிறைக்கு மாற்றக் கூடாது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.