சுப்ரீம் கோர்ட்டி வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் ஜெயலலிதா ஜாமீன் மனு வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராக கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். பாலி நாரிமனின் மகன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பதால் இந்த ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒருதலை பட்சமாக வரும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் கடந்த 15 தினங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
கர்நாடக ஐகோர்ட்டில் அவருடைய ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் விசாரணை வரும் 17ஆம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா ஜாமீன் வழக்கில், ஆஜராகவுள்ள பாலி நாரிமனுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிமன்ற அலுவலகத்தில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
“பாலி நாரிமன் மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதிமன்ற நீதிபதியாக தற்போது பணிபுரிகின்றார். எனவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பாலி நாரிமன் ஆஜரானால், தந்தை வழக்காடும் வழக்கில் மகன் ஒருதலைப்பட்சமான தீர்ப்பு தர வாய்ப்பு உள்ளது. எனவே, ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான வழக்கில் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவ்ரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.