விஜயகாந்தின் கூட்டணி ரகசியத்தை உடைத்தார் டிராபிக் ராமசாமி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலிமை இல்லை என்பதால் இந்த கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தீவிர முயற்சிகள் நடக்கின்றது.
ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீனாக எல்லாக் கட்சிகளுக்கும் தண்ணி காட்டி வருகிறார். அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வரும் எல்லோரிடமும் நம்பிக்கைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று தேமுதிக கட்சி தலைவரை பிரபலசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, ‘விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை விஜயகாந்திடம் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டேன். இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும். விஜயகாந்த்திற்கு எனது முழு ஆதரவு உண்டு” என்று கூறினார்.
டிராபிக் ராமசாமி கூறியதுபோல் தேமுதிக தனித்து இந்த தேர்தலில் போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமம் என பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.