திருச்சி துணைமேயர் ஆசிக் மீரா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை திருச்சி மாநகர மேயர் ஜெயாவிடம் நேற்று அளித்துள்ளார்.
ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி அவரை தாயாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆசிக் மீராவை பதவியில் இருந்து விலகுமாறு அதிமுக மேலிடம் அவரிடம் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பதவியேற்பதற்கு முன்பே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ மரியம் பிச்சை. இவருடைய மகன் தான் இந்த ஆசிக் மீரா. மரியம் பிச்சை குடும்பத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்த முதல்வர் அவரை துணை மேயராக்கி அழகுபார்த்தார். ஆனால் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் ஆசிக் மீரா என அவர் மீது கட்சியினர் அதிருப்தி கொண்டுள்ளனர்.
“திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா தன்னை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்யாமல் புறக்கணிக்கிறார். அவரும் அவருடைய அத்தை, மற்றும் நண்பர்கள் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்” என்று திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த மார்ச் 8-ம் தேதி புகார் கொடுத்தார் துர்கேஸ்வரி என்ற 28 வயது இளம்பெண். அவருடைய மனுதான் ஆசிக் மீராவின் பதவியை பறித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஆசிக் மீரா தரப்பில் சொந்த காரணங்களுக்காக தான் பதவி விலகியதாகவும் மற்றபடி தன்னை பற்றி வரும் வதந்திகள் அனைத்தும் பொய் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.