2ஜி வழக்கை வைத்து பாஜக அரசு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று கனவு கண்டால் அது நிச்சயம் நடைபெறாது என திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும் எம்.பி.யுமான திருச்சி சிவா அவர்கள் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் சட்டப்படி வழக்கை எதிர்க்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்ற உண்மை விரைவில் நிரூபிக்கப்பட்டு நிரபராதிகளாக வெளியில் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே வலம் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடக்கும் இந்த வழக்கில் மத்திய அரசு தலையீடு செய்யும் என்பது ஏற்கமுடியாத ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று மு.க.அழகிரி கூறி வருவது குறித்து கருத்து கூறிய திருச்சி சிவா, ” அவர் தேர்தலுக்குத் தேர்தல் திமுக தோற்கும் என்றுதான் சொல்லி வருகிறார். ஆனால், கழகத்தின் லட்சிய வீரர்களும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு நிற்கும் தமிழக மக்களும் மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்பதில் தீர்க்கமாய் இருப்பதால் இம்முறை அவரது கனவு பலிக்காது’ என்று கூறினார்.
மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயார் நிலையில் உள்ளதாகவும், எப்போது தேர்தல் வந்தாலும் அதத திமுக சந்திக்கும் என்று கூறிய திருச்சி சிவா, முந்தைய திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் கிடைத்த நன்மைகளை மக்கள் உணர ஆரம்பித்துள்ளதாகவும், எந்தவிதமான தொலை நோக்குத் திட்டங்களையும் தராத அதிமுக அரசு, முந்தைய அரசின் முத்தான திட்டங்களை முடக்கி வைத்திருப்பதையும் மக்கள் பார்த்து வருவதாகவும் கூறினார்.