டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்து ஆர்ப்பாட்டம். திருச்சியில் பெரும் பரபரப்பு
[carousel ids=”68275,68276,68277″]
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் அமைதியான முறையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் கண்டன கூட்டங்கள் ஆகியவை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியினரால் மதுக்கடை அடித்து நொறுக்கப்பட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள மதுவகைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மறைந்த தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் திடீரென நுழைந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், அங்கிருந்த பணியாளர்களை அடித்து விரட்டிவிட்டுவிட்டு, தங்கள் கைகளில் பிடித்திருந்த கொடிக் கம்புகளால், கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கினர். மேலும் கடையை இழுத்து மூடு… இழுத்து மூடு டாஸ்மாக்கை இழுத்து மூடு, விடமாட்டோம்… விடமாட்டோம் நாம் தமிழர் விடமாட்டோம்” என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
மேலும் மதுபாட்டில்கள் அடுக்கப்பட்ட அட்டைப்பெட்டிகளையும் கடைக்கு வெளியே தூக்கி போட்டு உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்லாயிரக்கணக்கான மதுபாட்டிகள் உடைந்து வீணானது. தொடர்ந்து கடையை அடித்து உடைத்த கையோடு மதுபான கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், இந்த சம்பவத்திற்கு காரணமான நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆனந்த், முனியப்பன், கோபி, சரவணன், விஜய், சிவா உள்ளிட்ட பலரை கைது செய்தனர். சமீபத்தில் சிறுவர்களுக்கு கொடுத்ததாக வந்த செய்தி மற்றும் கோவையில் மாணவி ஒருவர் குடித்துவிட்டு கலாட்டா செய்த செய்தி ஆகியவை நடந்த நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.