ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினரும், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் இரு மாநிலங்களுக்கிடையே பெரும் பதட்டம் நிலவுகிறது.
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகளை தெலங்கானா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டதால், ஐதராபாத் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொண்டர்கள், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தெலுங்கு தேச தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் தொடர்ந்து தெலங்கானா மாநிலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், ராயலசீமை பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். அந்த நீர்மின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் 300 மெகாவாட் மின்சாரத்தை தெலங்கானாவுக்கு வழங்க ஆந்திர அரசு தயாராக இருந்தபோதிலும், எங்கள் கட்சியினரை குறிவைத்து தெலங்கானா பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.