டிரம்ப்-புதின் முதல்முறையாக சந்திப்பு: திருப்பங்கள் நிகழுமா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவுள்ளார். ஏற்கனவே அதிபர் டிரம்ப் வெற்றிக்கு ரஷ்யா உதவிய நிலையில் இரு பெரும் தலைவர்கள் சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் அடுத்த வாரம் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளதூ. இந்த மாநாட்டின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதன்முறையாக சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் மெக்மாஸ்டர் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-
ஜெர்மனி நாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்னதாக அமெரிக்கா – ரஷியா நாடுகளுக்கு இடையில் அமெரிக்காவின் ஒவ்வொரு அரசு துறையின் சார்பாக உள்ள முக்கிய பிரச்சனைகளை உடனடியாக ஆய்வு செய்து குறிப்புகளை சேகரிக்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவை சீர்குலைக்க முயற்சிக்கும் ரஷியாவின் நடவடிக்கை, சைபர் தாக்குதல் அச்சுறுத்தல், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிறநாடுகளில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மிக வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையில் போர் மூளுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, போருக்கான பாதையை தேர்வு செய்ய விடாமல் ரஷியாவை தடுத்து நிறுத்தி அறிவுறுத்துவது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
அடுத்ததாக, இரு நாடுகளுக்கு இடையில் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை அதிகப்படுத்துவது என்று ஆய்வு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, வடகொரியா விவகாரம், நாடுகடந்து விஸ்வரூபம் எடுத்துவரும் தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டியுள்ளது. மேலும், ஜி-20 மாநாட்டுக்கு இடையில் ஜெர்மனி, பிரிட்டான், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்சிகோ, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.