இன்று தொடங்குகிறது ஜி-20. முதல்முறையாக டிரம்ப்-புதின் சந்திப்பு
ஜெர்மனியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல உலக நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இந்த மாநாட்டில் முதல்முறையாக நேரில் சந்திக்க உள்ளனர்.
உலகின் இரு துருவங்கள் எனக் கருதப்படும் புதின் மற்றும் டிரம்ப் சந்திக்கவுள்ள இந்த முக்கியமான சுமார் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் இந்த சந்திப்பின்போது சிரியாவில் அமெரிக்க-ரஷ்யா இடையேயான மாறுபட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்யா மீது கூறப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹம்பர்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 76 போலீசார் படுகாயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல், ஜி-20 மாநாடு நடைபெறும் நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.