அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் டிரம்ப்: முன்னாள் உளவுத்துறை இயக்குனர் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் மீது பொதுமக்களும், அரசு உயரதிகாரிகளும் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். பல முக்கிய அதிகாரிகல் ராஜினாமா செய்துள்ள நிலையில் சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே செய்தியாளர்களிடம் கூறியபோது அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் டிரம்ப் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: டிரம்ப் மருத்துவ ரீதியாக இந்நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் தகுதி உடையவர்தானா? அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா? என்னும் சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை.
அவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகிக்க மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என நான் கருதவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக நமது நாட்டின் அதிபராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை.
நமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும். மிக முக்கியமாக உண்மையானவராக இருக்க வேண்டும். டிரம்ப்பால் இதை எல்லாம் கடைபிடிக்க இயலாது’ என்று கூறியுள்ளார்.