அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும். டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளதால் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் பெற்று வரும் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை நேற்று தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க-சவுதி அரேபியா உறவில் விரிசல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல ஊடகமான நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு நேற்று பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப் தனது பேட்டியில், “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த கருத்துக்கு சவுதி அரேபியா தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.