சென்னையில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்த மாணவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர் பொது இடத்தில் முட்டி போடும் தண்டனை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் ஒன்றில் நேற்று முன் தினம் மாணவர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். இந்த மாணவர்கள் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கினார்கள். மாணவர்களிடம் டிக்கெட் என்பதை தெரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் அந்த பிளாட்பாரத்திலேயே மாணவர்களை முட்டி போட வைத்து தண்டனை வழங்கியுள்ளார்.
டிக்கெட் பரிசோதகர் இந்த செயலுக்கு ரயில்வே போலீசாரும் ஆதரவாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தவறு என்றால், பொது இடத்தில் இதுபோன்ற தண்டனையை அளிப்பதும் தவறுதான் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.
பிடிபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அல்லது ஆசிரியர்களை வரவைழத்து அவர்களிடத்தில் நடந்ததை கூறி டிக்கெட் பரிசோதகர் அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கலாம். பொது இடத்தில் இது போன்று மாணவர்களை நடத்துவது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அறியாத அந்த டிக்கெட் பரிசோதகருக்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றது.