இரட்டை இலை சின்னத்திற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. தினகரன்
இரட்டை இலை சின்னத்திற்காக தான் யாரிடமும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றும், தான் லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இன்று காலை டெல்லியில் தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்று இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறியதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் டெல்லி போலீசார் தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சற்று முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியபோது, ‘நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. சின்னம் தொடர்பாக யாரிடமும் பேசவும் இல்லை. டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் பேசியதே இல்லை. அதிமுகவை அழிக்கும் நோக்கில் யாரோ சிலர் சதி செய்கிறார்கள். போலீசார் இதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. சம்மன் அனுப்பினால் அதைச் சட்டப்படி சந்திப்பேன்’ என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று பெங்களூர் சென்று சசிகலாவை தினகரன் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இரட்டை இலை பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் சசிகலாவிடம் ஆலோசனை பெறுவார் என்று கூறப்படுகிறது.