சட்டமன்றத்தில் இருந்து டிடிவி தினகரனின் முதல் வெளிநடப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் நேற்று முதல் நாளில் சட்டமன்றத்திற்கு சென்ற நிலையில் இன்று அவர் தனது கன்னிப்பேச்சை பதிவு செய்தார். இந்த நிலையில் அமைச்சர் தங்கமணியின் உரைக்கு பதில் அளிக்க வாய்ப்பு தராததால் டிடிவி தினரகன் இன்று முதல்முறையாக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
சட்டமன்ற கூட்டத் தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயிாிழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கேள்வி நேரத்தின் போது விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது மின்சார துறை அமைச்சர் தங்கமணி அரசு முழு மெஜாரிட்டியுடன் செயல்பட்டு வருகிறது என்று தொிவித்தார். மேலும் சிலர் தி.மு.க.வுடன் கூட்டு வைத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக முதல்வர், துணை முதல்வர் ஏற்கனவே தொிவித்திருந்த கருத்தை முன்மொழிந்து தினகரனை மறைமுகமாக தாக்கி பேசியதாக தொிகிறது.
இதற்கு பதில் அளிக்க டிடிவி தினகரன் பதில் அளிக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் சபாநாயகர் அமைச்சர் உங்களை குறிப்பிட்டு பேசவில்லை என்று கூறி வாய்ப்பை மறுத்ததாக தினகரன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடா்ந்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது:
சட்டமன்றத்தில் அமைச்சர் என்னை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். ஆனால் அதற்கு பதில் அளிக்க எனக்கு நேரம் ஒதுக்க மறுக்கின்றனர். எதிர்க்கட்சி வாிசையில் என்னை அமர வைத்துள்ளனர். எனதருகில் தி.மு.க.வினர்கள் தான். அவர்களிடம் நான் பேசினால் என்னை குறை கூறுகின்றனர்.
தற்போது துணை முதல்வராக இருக்கக் கூடிய ஓ. பன்னீா்செல்வம் தான் இதே அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார். ஆனால் அவரை தற்போது அருகிலேயே வைத்துள்ளனர். என்னை மட்டும் குறை கூறுகின்றனர். ஆட்சியில் இருப்பது மைனாரட்டி அரசு. முறைப்படி பார்த்தால் இவா்களது ஆட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.