பிருந்தாவுக்கு மார்பகத்தில் திடீரென ஒரு கட்டி. புற்றுநோயாக இருக்குமோ, என பயந்து மருத்துவமனைக்குச் சென்றால், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அது புற்றுநோய்க் கட்டி இல்லை, வெறும் கொழுப்புக் கட்டிதான் என்று உறுதியானது. நம்மில் பலருக்கு உடலில் இப்படி திடீரெனக் கட்டிகள் தோன்றி, பயமுறுத்திவிடும். இந்தக் கட்டிகள் ஏன் தோன்றுகின்றன? இவை ஆபத்தானவையாக மாறுமா? கொழுப்புக் கட்டிகளையும், பிற கட்டிகளையும் எப்படிப் பிரித்து அறிவது?
கொழுப்பு செல்களின் அதிகப்படியான வளர்ச்சியே கொழுப்புக் கட்டிகள். இந்தக் கட்டிகள் மென்மையாக உருண்டையாக, நகரக்கூடியதாக இருக்கும். கை விரலால் அழுத்தும்போது, நகர்வது போல தெரியும். வலி இருக்காது. தசை (Muscle layer) மற்றும் தோலுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும். உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் வரலாம். பெரும்பாலும் கழுத்து, மேல் கை, தோள்கள், முதுகு, அடிவயிறு, தொடை, தலை, நெற்றி போன்ற இடங்களில் ஏற்படும். சிலருக்கு மூளை, சிறுநீரகம், மார்பகம் போன்ற உள் உறுப்புக்களில்கூட ஏற்படலாம். ஒரு கட்டிதான் வளரும் என்று இல்லை. பல கட்டிகள்கூட வரலாம். 0.4 – 3 செ.மீ அளவுக்கு கட்டிகள் வளர்வது சகஜம்.
கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், உடல் பருமன், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதது, மது அருந்துதல், மரபியல்ரீதியான காரணங்களால் இது ஏற்படலாம்.
இந்த வயதினருக்குதான் வரும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரும்பாலும் 25-50 வயதில் இந்தக் கட்டிகள் ஏற்படலாம். கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை. எனினும் கட்டி வளர்கிறதா, வலி இருக்கிறதா, சருமத்தின் நிறம் மாறுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஒருமுறை கட்டி வந்துவிட்டதை அறிந்தால், அது கொழுப்புக் கட்டிதானா என உறுதிப்படுத்திவிட்டு, அவற்றை அப்படியே விட்டுவிடலாம். அதற்குச் சிகிச்சைகள் எதுவும் தேவை இல்லை.
கட்டி உள்ள பகுதியில் வலி, எரிச்சல், கட்டி மேல் தொற்று, துர்நாற்றம், கட்டியின் வளர்ச்சி அதிகரித்தல், தோற்றத்தைக் கெடுப்பது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும். உடலுக்குத் தொந்தரவு தராத ஒன்றை, தேவை இன்றி அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டாம். சிலருக்குக் கட்டியை அகற்றினாலும்கூட மீண்டும் உருவாக வாய்ப்பு உண்டு. இது அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும்.