துருக்கி: ராணுவம் மீது தாக்குதல் நடத்திய 35 போராளிகள் சுட்டுக்கொலை
துருக்கி நாட்டில் சமீபத்தில் ராணுவ புரட்சி ஏற்படுத்த முயற்சி செய்தபோது பொதுமக்களின் துணையோடு துருக்கி அரசு புரட்சியை முறியடித்தது. இந்த புரட்சிக்கு காரணமான ஏராளமான அரசு ஊழியர்கள், நீதிபதி, ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புரட்சிக்கு பின்னர் ராணுவத்தில் மிகப்பெரிய மாறுதல் கொண்டு வர துருக்கி அதிபர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை குர்திஷ் போராளிகள் திடீரென ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50க்கும் அதிகமான குர்திஸ்தான் போராளிகள் நடத்திய இந்த தாக்குதலை துருக்கி ராணுவ வீரர்கள் முறியடித்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 35 குர்தீஷ் போராளிகள் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே நேற்று வாகன தணிக்கை மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்மீது குர்திஸ்தான் போராளிகள் அதிரடியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.