ராணுவ புரட்சி எதிரொலி: துருக்கியில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம்

ராணுவ புரட்சி எதிரொலி: துருக்கியில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம்

Turkey coup attemptதுருக்கியில் கடந்த வாரம் ராணுவத்தின் ஒருசில பகுதியினர் ஆட்சியை கைப்பற்ற்றும் அதிரடி முயற்சியில் ஈடுபட்டனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ டாங்கிகளை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், துருக்கி பெரும்பாலான பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், துருக்கி அரசாங்கம் இனி தங்கள் கைகளில் என்றும் கூறினர். ஆனால் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும், துருக்கி அதிபர் எர்டோகன் எடுத்த அதிரடி நடவடிக்கையாலும் இந்த ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

அதிபரின் அதிரடி நடவடிக்கையால் 246 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் எர்டோகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் எர்டோகன், “ராணுவத்தில் புகுந்துள்ள அனைத்து கிருமிகளையும் அகற்றப்படும். துருக்கி ஒரு சுமூகமான சூழ்நிலையை எட்டுவதற்காகவும், மீண்டும் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடாமல் இருக்கவும், மூன்று மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என அறிவித்தார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து, அடுத்த 3 மாதங்களுக்கு துருக்கியில் அவசரநிலை சட்டம் அமலில் இருக்கும். ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக சுமார் 10 ஆயிரம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் காவலை நீட்டிக்க இந்த அவசர நிலை பிரகடனம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Leave a Reply