சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அந்தோணி கிரேஸ் அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், நேல்லை மாநகராட்சி மேயராக புவனேஸ்வரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் தூத்துக்குடி நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.பி.ஆர் அந்தோணி கிரேஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில், அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி எம்.எல்.ஏ சீனாத்தானா செல்லப்பாண்டியன், கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் நெல்லை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த புவனேஸ்வரியும் இன்று மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் லட்சுமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் புவனேஸ்வரி, மக்களின் நலனுக்காக முதல்வர் செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்றார்.