மதிமுகவில் இருந்து திடீரென திமுகவிற்கு தாவிய வழக்கறிஞர் ஜோயல்
வைகோவின் மதிமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள் முதற்கொண்டு முன்னணி தலைவர்கள் திமுக பக்கம் கடந்த சில மாதங்களாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் உள்பட நான்கு பேர் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் மதிமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல். மற்றவர்கள் நெல்லை மா.செ. பெருமாள், நெல்லை புறநகர் மா.செ.சரவணன், கன்னியாகுமரி மா.செ. தில்லை செல்வம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தது குறித்து ஜோயல் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” ” ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமுறை வைகோ அவர்கள் பேசும்போது, ‘ நாம் தி.மு.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். கட்டாயம் வெற்றி பெறுவோம்’ என்றார். அடுத்து வந்த சில வாரங்களில், ‘ தி.மு.கவோடு கூட்டணி கிடையாது. மக்கள் நலக் கூட்டு இயக்கம்’ என அறிவித்தார். அது கூட்டணியாகவும் மாறிப் போனது. ‘ இந்தக் கூட்டணியால் ஓட்டுக்கள் பிரிந்தால் அ.தி.மு.கவிற்கு சாதகமாக முடியும்’ என்று சொன்னோம். ‘அ.தி.மு.க வெற்றி பெறட்டும்’ என பகிரங்கமாகவே பேசினார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ தவறான முடிவு எடுக்கிறீர்கள்’ எனச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘தி.மு.க எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் என் நோக்கம்’ என்றார். அவர் யாருடைய பேச்சையும் கேட்கும் முடிவில் இல்லை. ம.தி.மு.கவில் இருப்பது என்பது பாலைவனப் பயணம் போலத்தான். எதையும் எதிர்பார்க்காமல்தான் பணி செய்து வந்தோம். இனியும் அப்படித்தான். தி.மு.க. எங்களுக்கு தாய் கழகம். எனவே, நாங்கள் அனைவரும் இணைகிறோம்”.
வைகோவின் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கும் நிலையில் திமுக தனது அதிரடி நடவடிக்கை மூலம் மதிமுக உடைக்க முயற்சிப்பதாக மதிமுக வட்டாரங்கள் கருத்து கூறியுள்ளன.