சார்ட்ஸ்-டீசர்ட்ஸ் அணியும் பெண்கள் குரங்குகளா? அசாமில் பெரும் பரபரப்பு
குட்டையான சார்ட்ஸ் அணிந்து சாலையில் நடந்து செல்லும் பெண்களை குரங்குக்கு இணையாக சம்பந்தப்படுத்தி அசாம் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டதால், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சிக்கு பெண்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அசாம் மாநிலத்தில் உள்ள “ப்ரதிதின் டைம்” என்ற தொலைக்காட்சி சேனல் சமிபத்தில் ஒளிபரப்பிய செய்தி ஒன்றில் குரங்கு பேண்ட் அணிந்திருப்பது போல காட்சி ஒன்றை ஒளிபரப்பி அதன் பின்னணியில் “இப்போதெல்லாம் குரங்குகள் கூட பேன்ட் அணிய ஆரம்பித்துவிட்டதாகவும், அந்த பேண்ட்டை எப்படி சலவை செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொண்டுவிட்டதாகவும் கூறியது. ஆனால் கெளஹாத்தியில் உள்ள இளம்பெண்கள் தங்களின் வசதிக்காக தற்போது `ஷார்ட்ஸ்’ அணிய ஆரம்பித்துவிட்டதாகவும் தங்களின் உடல் அழகை எடுத்துக்காட்டுவதற்குப் பெயர்தான் பேஷன் என்று நினைப்பதாகவும் அசாமிய மொழியில் செய்தி ஒளிபரப்பியது. அப்போது, பல இளம்பெண்கள் குட்டையான ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு சாலையில் நடக்கும் காட்சிகள் அதில் காட்டப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாமில் உள்ள பெண்கள் அமைப்பினர் கடந்த ஞாயிறு அன்று பேரணி ஒன்றை நடத்தினர். பேரணி நடத்திய பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி புஜர்பருவாஹ் கூறும்போது, “இங்கே தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் நாங்கள் போலீஸைக் காட்டிலும், மீடியாவுக்குத்தான் அதிகம் பயப்படுகிறோம். செய்தி என்ற பெயரால் எங்களை அவை அவமானப்படுத்துகின்றன. ஜனநாயகத்தின் தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களும் கலாச்சாரக் காவலர்களாக மாறிவிட்டது வேதனையாக உள்ளது” என்று கூறினார்.
இதுகுறித்து “ப்ரதிதின் டைம்” சேனலின் ஆசிரியர் நிதுமோனி சைகியா கூறும்போது, “இந்தச் செய்தியின் மூலம் மக்களின் மனதை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்தச் செய்தியைச் சேகரித்த நிருபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுபோன்ற உடைகளை அணிந்துகொண்டு எந்தப் பெண்ணாவது கோவில் போன்ற புனிதமான பகுதிக்குச் செல்ல முடியுமா? என்பதையும் சார்ட்ஸ் அணியும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.