ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானமும், யாலிடோரோவ்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானமும் நேற்று கடத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு விமானங்களையும் தீவிரவாதிகள் கடத்தியிருப்பார்கள் என அஞ்சப்படுகிரது.
இவை இரண்டுமே சிறிய ரக விமானங்கள் என்றும் முதலில் கடத்தப்பட்ட யாக்-52 ரக விமானம் பறந்து கொண்டிருந்தபோது எஞ்சினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அதை யாலிடோரோவ்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கிய கடத்தல்காரர்கள், அங்கு நின்றிருந்த ‘கர்டன் GY-80-160’ ரக விமானத்தையும் கடத்திச் சென்றுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம் எங்கே கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடத்தல்காரர்களிடம் இருந்து இன்னும் எவ்வித தகவல்களும் கோரிக்கைகளும் வராததால் ரஷ்யாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட விமானங்களை கண்டுபிடிக்க ரஷ்ய விமானப்படைக்கு உத்தரவு இடப்பட்டிருப்பதாகவும் மீட்புக்குழுவினர் உதவியுடன் ரஷ்ய விமானப்படை கடத்தபட்ட விமானத்தை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.