மேலும் 2 கேமராக்களில் சுவாதி கொலைகாரன்? தோழிகளிடம் விசாரணை செய்ய போலீஸார் முடிவு
இளம்பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் இரண்டு வீடியோக்கள் ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு வீடியோக்கள் கிடைத்துவிட்டதாகவும் கொலையாளியை போலீஸ் நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று சுவாதி வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் தனியார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைபோலீஸார் ஆய்வு செய்ததில் இரண்டு கேமராக்களில், சுவாதி தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாதி, தனது தந்தை சந்தானகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, டீக்கடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு மர்ம நபர், சுவாதியைப் பார்த்து தனது முழு கவனத்தையும் சுவாதி மீது செலுத்துவதும், பின்னர் சுவாதியைப் பின் தொடர்ந்து செல்வதும் இந்த கேமராக்களில் பதிவாகியுள்ளதாம்.
இந்த மர்ம நபர்தான், ஏற்கெனவே போலீஸாரிடம் கிடைத்த இரு விடியோ காட்சியிலும் உள்ளவர் என்றும், அந்த மர்ம நபர்தான் சுவாதியை கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க 25 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தனிப்படை போலீஸார், சுவாதியின் நெருங்கிய தோழிகளிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். சுவாதியை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டிருந்தால், அதை அவர் தனது தோழிகளிடம் கூறியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், போலீஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதேவேளையில் சுவாதி, சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் 6 மாதம் பயிற்சிக்கு சென்றிருந்ததால், அங்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சைபர் குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 6 மாதத்தில் சுவாதியின் செல்லிடப்பேசியில் பேசிய நபர்கள் குறித்த தகவல்களை திரட்டி, அதனடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சுவாதியை கொலை செய்த நபர், அவரது தோழி அல்லது குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு வகையில் தெரிந்தவராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல்துறையினரால் கருதப்படுகிறது.