சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் தற்கொலை. பெரும் பரபரப்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் தற்கொலை. பெரும் பரபரப்பு

iitஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி.யில் அவ்வப்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த வளாகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவி ஒருவரும், பேராசிரியர் ஒருவரின் மனைவியும் திடீரென தற்கொலை கொண்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. சபர்மதி விடுதியில் தங்கி, புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி என்ற 34 வயது பெண் தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், மகேஸ்வரி நேற்று விடுதியில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இதேபோல் அதே ஐ.ஐ.டி.யில் இயற்பியல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் ஐஐடியை சேர்ந்த இருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலைகள் பற்றிய தகவல் அறிந்தவுடன் கோட்டூர்புரம் போலீசார், சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகேஸ்வரி மற்றும் விஜயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த விபரமும் தெரியாததால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply