எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100வது பிறந்ததினத்தில். நினைவு தபால்தலை வெளியிட ஐ.நா சபை முடிவு
இந்தியாவின் 70-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதே தினத்தில் ஐ.நா. சபையின் சார்பில் மறைந்த பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நினைவு தபால் தலை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் இசைக் கச்சேரி செய்தார். ஐ.நா.வில் இசைக்கச்சேரி செய்த முதல் இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பாரத ரத்னா’ பட்டம் உள்பட பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இசைக்கச்சேரியை பாராட்டி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ’நான் சாதாரண பிரதமர். எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு அரசி, இசையின் அரசி. என மனம் குளிர்ந்து பாராட்டினார்.
இந்நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100வது பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ஐ.நா.வில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நினைவாஞ்சலி செலுத்தும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
மேலும் இவ்விழாவின்போது எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.