அமெரிக்க கோழி இறைச்சிக்கு இந்தியா தடை விதித்தது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வுக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவில் மிகவேகமாக பரவிய பறவைக் காய்ச்சலை தடுக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றுதான் அமெரிக்க கோழிகள் இறக்குமதிக்கு தடை விதித்த அறிவிப்பு. இந்த தடை காரணமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள் அடியோடு நிறுத்தப்பட்டன. இனால், அமெரிக்கா பொருளாதார ரீதியில் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது.
இந்தியாவின் இந்த தடையை எதிர்த்து அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
இந்த தீர்ப்பில் இந்தியாவின் தடை முடிவு சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வுக்குழு அறிவித்தது. இதனால், இந்த வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் இந்தியா மேல்முறையீடு செய்ய முடியும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து கால்நடை ஆய்வாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது