அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் பறிப்பு

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில், துணைத்தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே, தனது வேலைக்காரப் பெண்ணுக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அவர் கடந்த 12 ஆம் தேதி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வரச்சென்றபோது, நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான புகாரை மறுத்தார். தொடர்ந்து அவர் 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஜாமீன் பெற்றார்.

இருப்பினும் பெண் என்றும் பாராமல், ஒரு உயர் அதிகாரியை இப்படி அமெரிக்கா அவமதித்தது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.  இரு தரப்பு உறவிலும் இந்தச் சம்பவம் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. தூதரக மட்டத்தில் மோதலும் உருவாகி இருக்கிறது.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையிடம் இந்தப் பிரச்சினையை இந்தியா தீவிரமாக எடுத்துச்சென்றுள்ளது. இதற்கிடையே இந்தியா இந்த விவகாரத்தில் நேற்று ஒன்றன் பின் ஒன்றாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அமெரிக்க அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதுகுறித்த விவரம்:

  • டெல்லி அமெரிக்க தூதரகம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க துணைத்தூதரகங்களிலும் உள்ள அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடையாள அட்டை ஒப்படைக்கப்பட்டதும் இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படுவது போல இவர்களுக்கும் சலுகைகள் வரைமுறைபடுத்தி குறைக்கப்படும்.
  • அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுகிற அதிகாரிகள், ஊழியர்களின் சம்பள விவரங்கள், வேலைக்காரர்களுக்கு தரப்படுகிற சம்பள விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
  • அமெரிக்க பள்ளிக் கூடங்களில் வேலை பார்க்கிற இந்திய ஆசிரியர்களின் விசா தகவல்கள், அவர்களுக்கு வழங்கப்படுகிற சம்பள விவரம், அவர்களது வங்கிக்கணக்கு தகவல்களைத் தருமாறு அமெரிக்க அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் இறக்குமதி ஒப்புதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
  • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிற வகையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன.
  • இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள், துணைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய அனுமதிச்சீட்டு திரும்பப்பெற நடவடிக்கை.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்க அரசுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply