4 முக்கிய ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு எமிரேட் இளவரசர் – மோடி கையெழுத்து

4 முக்கிய ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு எமிரேட் இளவரசர் – மோடி கையெழுத்து
uae
இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான் அவர்களும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் நான்கு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்பட முக்கிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், “இந்தியா, யுஏஇ இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பணப் பரிவர்த்தனை, இணையவழி நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு ஆகியவை தொடர்பான 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்த யுஏஇ இளவரசர் அல் நக்யானுக்கு, புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, யுஏஇ இளவரசர் அல் நக்யானுடன், இந்தியா வந்துள்ள அந்த நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் சுஹைல் முகமது அல் மஜ்ரோயி, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, புதுடெல்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கிடங்குகளில் மொத்தம் 5.33 மில்லியன் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சேமிக்க இயலும். அவற்றில், மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு இலவசமாக அளிக்க யுஏஇ முன்வந்துள்ளது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Leave a Reply