கடந்த பிப்ரவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உதயகுமார் திடீரென ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இன்று விலகியதாக அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் அக்கட்சியின் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் உள்பட அவரது ஆதரவாளர்கள் நெல்லை மை.பா.ஜேசுராஜ், தூத்துக்குடியில் புஷ்பராயன் ஆகியோர்க்ள் டெபாசிட் கூட வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக இன்று உதயகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளாவது:
”போராட்டக் குழுவினர், மீனவ கிராம மக்கள், சமுதாய தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஆம் ஆத்மி கட்சியில் சில நிபந்தனைகளுடன் இணைந்தோம்.
ஆனால், தமிழக மக்களின் உணர்வுகள், தமிழக அரசியல் நிலைப்பாடு, அணு உலைக்கு எதிரான கொள்கை தொடர்பாக கட்சித் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஹிந்தி பேசும் 9 பேருக்கு மட்டுமே அங்கு பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. இதனை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நேரிலும், கடிதம் மூலமும் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை.
இந்தியாவின் அணுசக்தி கொள்கை பற்றி ஒரு தெளிவான வெளிப்படையான நிலையை அவர்கள் எடுக்கவில்லை. தமிழக நிலைமைகளை அறியாமலும், தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாகவும் கட்சியின் டெல்லி தலைவர்கள் உள்ளனர். தமிழர் பிரச்னைகளை உண்மையாக உணர்வு பூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்று பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை.
அரசியல்வாதி ஆக வேண்டும் என்பதோ, தலைவராக வேண்டும் என்பதோ எனது நோக்கம் இல்லை. எனவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுகிறேன்.
இவ்வாறு உதயகுமார் தெரிவித்துள்ளார்.