தெலுங்கு வருட பிறப்பு என்று அழைக்கப்படும் யுகாதி திருநாள் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய யுகாதி திருநாளையொட்டி திருமலை ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 7.30 மணிக்கு யுகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது.
ஏழுமலையான் கோவில் தங்க வாசல் அருகே புதிய வருடமான ‘மன்மத நாம’ ஆண்டு பஞ்சாட்சம் படிக்கப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகள், தேவஸ்தான நிர்வாகிகள் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் யுகாதி திருநாளை யொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்விளக்கு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக விசேஷமாக 4 டன் உள்நாட்டு மலர்களும் 2 லட்சம் வெளிநாட்டு மலர்களும் வரவழைக்கப்பட்டு இருந்தது.
மகாவாயில் முதல் கருவறை வரை கண்ணை கவரும் வகையில் வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவ தானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பள்ளி கொண்ட பெருமாள் உருவம் அனைவரையும் கவர்ந்தது.
ஆந்திர கவர்னர் மாளிகையில் ஆளுனர் நரசிம்மன் யுகாதி விழாவை சிறப்பாக கொண்டாடினார். இந்த விழாவில் முன்னாள் குடியரசு தலைவர்அப்துல் கலாம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நரசிம்மன் யுகாதி விருந்து அளித்தார். விழாவில் அப்துல் கலாம் தெலுங்கில் பேசி மக்களுக்கு யுகாதி வாழ்த்தை தெரிவித்தார்.
பஞ்சாங்க பண்டிதர் சம்பத்குமார் சாஸ்திரி ‘மன்மத நாம’ வருட பஞ்சாங்கம் படித்தார். புதிய வருடத்தில் பயிர் வளர்ச்சி அமோகமாக இருக்கும் என்றும், அரசியலில் குழப்ப நிலை ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.