பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா. புதிய பிரதமர் யார்?
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகக்கூடாது என்று பொதுவாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரது பிரச்சாரத்திற்கு எதிராக பொதுவாக்கெடுப்பு முடிவு வெளிவந்தது. எனவே தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நாளை ராஜினாமா செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் தற்போது தோன்றியுள்ளது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் தெரஸா மே மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லெட்சம் ஆகியோர் இருந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் தெரஸா மே புதிய பிரதமராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்ரெட் தாட்சரை அடுத்து பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கவுள்ள இரண்டாவது பெண் பிரதமர் தெரஸா மே என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தேசிய நலனுக்காக இந்த போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லெட்சம் தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு டேவிட் கேமருன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்களின் முழு ஆதரவையும் தெரஸா மே பெற்று உள்ளார், போட்டியில் இருந்து விலகி ஆண்ட்ரியா லெட்சம் சரியான முடிவை எடுத்து உள்ளார் என்று கூறியுள்ளார்.