வித்யாசிரமத்தில் ஒரே பரபரப்பு… அங்கிருப்பவர்கள் அனைவரும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆசிரமத்தின் தாளாளரும் ஆசிரியர்களும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, மாணவர்களையும் சுத்தப்படுத்தும் பணியில் துரிதப்படுத்தினார் கள். காரணம், அந்த ஆசிரமத்திற்கு சுவாமி சுத்தானந்தா ஆசி வழங்க வருகிறார் என்பது தான்.
அந்தச் சமயத்தில் சுறுசுறுப்பும் தன்னூக்க மும் கொண்ட மாணவன் ஒருவன் மெல்ல ஆசிரியர்முன் வந்து, “”சார், சாமி உபதேசம் பண்ண வரப்போகிறார். அவர் உட்காரப் போகிற இடத்தை மட்டும் சுத்தம் பண்ணி னால் போதாதா? எல்லாம் துறந்தவர் மொத்த இடத்தையும் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்பதை பெரிய விஷயமாக நினைத்துக் கோபித்துக் கொள்ளப் போகிறாரா? அப்படி மற்றவர்மேல் குற்றம் பார்ப்பவர் துறவியாக முடியுமா?” என்று கேட்டான்.
சிறிது நேரம் அவனையே பார்த்த ஆசிரியர், “”இந்த செயல்களெல்லாம் அவருக்காகச் செய்கிறோமென்றோ- அவர் எதிர்பார்ப்பா ரென்றோ யார் சொன்னார்கள்? அனைத் தையும் கடந்தவர் இதை கவனிக்கக்கூட மாட்டார். மனதில் உள்ள அழுக்கைக் களைய வந்தவர் வெற்றுநிலக் குப்பையைப் பற்றி கவலைப்பட மாட்டார். இதுவெல்லாம் நமக் காகத்தான். காரணம், மனமே சூழலின் அடிமை. நமது மனம் மேன்மை களில் லயிக்க வேண்டுமெனில், சூழலும் மேன்மை யாக இருக்க வேண்டும்.
மேலும் அவரின்பால்- அவரின் நன்மொழி களின்பால் ஒன்றுவதற்கு அவருக்காகச் செய்யும் ஏற்பாடுகளில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாம் இந்த வேலைகளுக்கு சில ஆயிரங்கள் செலவழித்து, வெளியாட்களை வைத்துச் செய்துவிடலாம். அது சிறப்பல்ல. இத்தகைய அருங்கல்வியினை மகாத்மா காந்தி, வினோபாஜி போன்றவர்கள் தங்கள் வாழ்வியல் மூலம் கற்பித்தார்கள். அதனால் மேன்மை கொழித்தது. ஆன்மநேயமும் ஒருமைப்பாடும் செழித்தது. உலகத்தின் ஆன்மிகக் குருவாக பாரதம் சிறந்தது. எனவே, இத்தகைய பயிற்சி மூலம்தான் நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்” என்றார்.
அந்த மாணவனின் உள்ளத்தில் புத்தொளி பிறந்தது. இது நமக்காக- நமது ஆன்மநேய முன்னேற்றத்திற்காக என்ற எண்ணம் எழுந்த தும், வேலை செய்யச் செய்ய வலிமை மிகுந்தது.
சாமிகள் வந்தார். சிலரின் வருகையே- இருப்பே சிறப்பினை நல்கும் என்பதனைக் கண்ணாரக் கண்டார்கள். அவரின் முககாந்தியும் ஏற்படுத்திய சாந்தியும் அனைவரின் உள்ளத் திலும் தெய்வீகத்தைக் கொலுவேறச் செய்தது.
பிறகு மெதுவாக சாமிகள் தனது இருக்கை யில் அமர்ந்ததும், ஆசிரமத்தின் மேலாளர் பவ்யமாக, “”குழந்தைகளுக்கு ஏதாகினும் ஒரு உபநிஷத்தின் சாரத்தையாவது உபதேசித்தால் நாங்கள் பேறு பெற்றவர்களா வோம்” என விண்ணப்பித்துக் கொண்டார். துறவியும் அதை அங்கீகரித்தார்.
ஆனாலும் வீரிய விதையை விதைப்பதற்கு முன்னால் நிலத்தின் தரத்தை அறிந்துகொள்ள வேண்டாமா? அதற்காக குழந்தைகளிடம் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
அசத்தும் வகையினிலே மாணவமணிகளும் பதிலளித்தார்கள். குருவே பிரமித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
குரு: வெற்றியென்பது என்ன?
மாணவர்: தன்னுள் அடங்குதல்.
குரு: உலகை வெல்லுவதற்கு என்ன வழி?
மாணவர்: தன் மனத்தை கட்டுக்குள் அடக்கி வெல்லுதல்.
குரு: மனிதனுக்கு சத்ரு யார்?
மாணவர்: அவனுடைய ஆசைகள்.
குரு: பகைவர் யார்?
மாணவர்: அகங்காரம், மமகாரம்,
அதன்விளைவாம் கோபம்.
குரு: முன்னேற்றும் ஏணி எது?
மாணவர்: பணிவு, சத்துவத்தில் நிரந்தர ஆர்வம்.
குரு: நிலைத்த வழித்துணை எது?
மாணவர்: நாம் செய்த நல்வினை.
குரு: ஞானமென்பது எது?
மாணவர்: நாய், நரியும் பரம் பொருளின் நல்லுருவே என்கின்ற உண்மையை உளமார ஏற்று வாழ்வினிலே செயற் படுத்தல்.
குரு: நம்மை நீங்காது தொடர்வன யாவை?
மாணவர்: செய்த வினைகள்.
குரு: பரமாத்மா, ஜீவாத்மா- விளக்க முடியுமா?
மாணவர்: கூட்டுக்குள் அடங்குங் கால் ஜீவாத்மா. புறத்தே நிறையுங் கால் பரமாத்மா.
குரு: வாழ்வில் பக்குவத்தில் தொடர்ச்சி, முடிவு எவை?
மாணவர்: புறத்தே உருவில் வணங் கிய இறையை, அகத்தே முக்குணங்களின் முகடேறி உணர்ந்து தெளிந்து அடங்குதல்.
குருவின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர்.
அதுவே மாணவச் செல்வங்களின் ஞானமுதிர்விற்கு அங்கீகாரப் பட்டயமாயிற்று. பின் அவர் பேசலுற்றார்.
“”குழந்தைகளே! கடோபநிஷத் பிறவாமைப் பேற்றையளிக்கின்ற அருமருந்தை மொழிந் துள்ளது. அதைச் சொல்லப் போகிறேன்.
அதாவது, இந்த தேகமெனும் தேரினை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளாகிய ஐந்து குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. பாசம் என்பதே கடிவாளக் கயிறாகும். மனத்தே விளங்கும் ஞானம்- செலுத்துபவன் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது. படிப்பு, அறிவு, ஞானம் என்பது வெவ்வேறாகும். முதலில் படிக்க வேண்டிய வற்றை ஆசிரியர் மூலம் கற்க வேண்டும். பிறகு அறிவுசார் கேள்விகள் மூலம் நுண்மையில் தெளிய வேண்டும். பிறகு நன்கு ஆய்ந்து, தோய்ந்து ஞானத்தே செழிக்க வேண்டும். இவ்வகையில் ஞானத்தின் வழிகளில் நம் பொறி களை வாழ்வினிற் செலுத்தினால், மரணத்திற்குப் பின்பும் (பூதஉடல் சாய்ந்த பிறகு) மரணமிலாப் பெருநிலை வந்தெய்தும். மண்ணிற் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இதுவே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவரிட மும் ஒரு நசிகேதனைப் பார்க்கிறேன். சாந்தி சாந்தி சாந்தி