40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் பிரமச்சாரியாக வாழ்ந்து வருகிறார் தொல்பொருள் ஆய்வாளரான பிரகாஷ்ராஜ். சமையல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரைப்போலவே திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக வாழ்ந்து வருபவர் சினேகா. ஒருநாள் சினேகா ஓட்டலுக்கு போன் செய்து சாப்பாடு ஆர்டர் கொடுக்கிறார். ஆனால் போன் நம்பர் மாறியதால் அந்த போன்கால், பிரகாஷ்ராஜுக்கு செல்கிறது.
சினேகாவின் ஆர்டரை வாங்கிய பிரகாஷ்ராஜ், என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும்போது, மீண்டும் சினேகாவிடம் இருந்து போன் வருகிறது. அப்போது பிரகாஷ்ராஜ், இது ஓட்டல் நம்பர் இல்லை என்றும், நீங்கள் தவறுதலாக போன் செய்துள்ளீர்கள் என்றும் கூறுகிறார். ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று கோபமாக கத்திவிட்டு போனை வைத்துவிடுகிறார் சினேகா
இந்நிலையில் பிரகாஷ்ராஜுடன் இருக்கும் அவரது அக்கா பையன் தேஜஸ், பிரகாஷ்ராஜுக்கு தெரியாமல் ஸாரி என்ற மெசேஜை சினேகாவுக்கு அனுப்புகிறார். பிரகாஷ்ராஜ்தான் மெசேஜ் அனுப்பியதாக எண்ணி, பதிலுக்கு சினேகாவும் ஸாரி என்று மெசேஜ் அனுப்புகிறார். பின்னர் இருவரும் போனில் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் காதலிப்பதாக தெரியவருகிறது. ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முடிவு செய்கின்றனர். ஆனால் தங்கள் வயதை நினைத்து நேரில் சந்திக்க தயங்கிக்கொண்டிருக்கும்போது, தேஜஸ் ஒரு திட்டம் போடுகிறார். அவருடைய திட்டம் வெற்றி அடைந்ததா? பிரகாஷ்ராஜ் – சினேகா சேர்ந்தார்களா ? என்பதுதான் கதை.
பிரம்மச்சாரி வேடத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றுகிறார். அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்கிறார்.
சினேகாவிடம் இருக்கும் அந்த புன்னகைதான் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட். முதிர்கன்னியாக திருமண வயதை தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஊர்வசி, தம்பி ராமையா, தேஜஸ், சம்யுக்தா ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.
ஒரு நடிகராக மிகச்சிறப்பாக நடித்த பிரகாஷ்ராஜ், ஒரு இயக்குனராக பல இடங்களில் சறுக்கியுள்ளார். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை, திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமல் சாதாரண காட்சியமைப்பு ஆகியவை சலிப்பை ஏற்படுத்துகிறது.
இளையராஜாவின் பின்னணி படத்திற்கு உயிரோட்டம் தருகிறது என்பது ஒரு ஆறுதல். மொத்தத்தில் சமையல் அறையில் ருசி குறைவாக இருந்தாலும், ஒருமுறை பார்க்கலாம்.