கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு கிளம்பிய பெங்களூர்- நாண்டட் எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.20 மணிக்கு அனந்தபுரி அருகேயுள்ள கொத்தசெருவு என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது குளிர்சாதன பெட்டியில் இருந்து பெரும்புகை வருவதை ரயில் டிரைவர் தற்செயலாக பார்த்தார். உடனே இரயிலை நிறுத்தி அந்த பெட்டியின் அருகில் சென்று பார்த்தபோது ஏ.சி. பெட்டி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியதால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே குதித்தனர்.
இந்த தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 23 பேர் உடல்கருகி இறந்தனர். இறந்தவர்கள் யாரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிப்போனதால் டி.என்.ஏ டெஸ்ட் செய்துதான் பிணங்களை அடையாளம் காணவேண்டும் என ரயில்வெ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காலை 9 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆந்திர மாநில வருவாய்த்துறை அமைச்சர் என்.ரகுவீர ரெட்டி அவர்களும், அனந்தபுரி எம்.பி. வெங்கடராமி ரெட்டி அவர்களும் மீட்புப்பணிகளை முடுக்கி விட்டனர். இறந்தவர்களின் உடல்கள வெளியே கொண்டுவரப்பட்டு, அனந்தபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரயில் விபத்தில் பலியான 23 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன அறிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ஆந்திர முதல்வரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.