பிப்ரவரி 29-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா தகவல்

2f9953e3-ef4b-4a93-a92a-b974cd83cbd5_S_secvpf

2016-17-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டிலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு லீப் வருடம் என்பதால் பிப்ரவரி 29-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும். இருப்பினும், இந்த ஆண்டு கூட்டத் தொடர் முன் கூட்டியே நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் சின்ஹா, அடுத்த மாதம் 29-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். மேலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், முன்கூட்டியே கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அனுமதி அளித்துள்ள புதிய பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply