மரணதண்டனையை ரத்து செய்ய முடியாது. சிபாரிசு குழுவின் அறிக்கை நிராகரிப்பு?
உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் மரன தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஒருசில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் மரண தண்டனையை ஒழிப்பது பற்றிய பிரச்னையை ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டது. இதனையடுத்து 9 பேர் கொண்ட சட்ட ஆணைய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தீவிரவாதம் குறித்த வழக்குகளைத் தவிர, இதர வழக்குகளில் மரண தண்டனையை கைவிடலாம் என்று சிபாரிசு செய்தது. இந்த சிபாரிசு அறிக்கை சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் நகல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்ட ஆணையத்தின் சிபாரிசு அறிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான ஆலோசனை நடத்தியது. மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அதில், சட்ட ஆணையத்தின் சிபாரிசை நிராகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ”மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் சட்ட ஆணையத்தின் சிபாரிசு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. மத்திய சட்ட அமைச்சகத்துடனும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். சட்ட ஆணையத்தின் சிபாரிசு நிராகரிக்கப்படுவதற்கே வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாட்டுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால், மரண தண்டனையை ஒழிப்பதற்கான காலம் கனியவில்லை என்று பெரும்பாலான அதிகாரிகள் கருதுகிறார்கள்” என்று கூறினார்.