பேருந்து வேலைநிறுத்தம் எதிரொலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து ஊழியர்களுடன் நேற்று தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் நேற்றிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போக்குவரத்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போதிய பேருந்துகள் ஓடாத காரணத்தினால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் அலுவலகங்களுக்கும் செல்ல இயலவில்லை.
இந்த நிலையில் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்றும், நாளையும் நடக்க இருந்த எம்.பில் மற்றும் தனித்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.