பலத்த மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகமும், சென்னைப் பல்கலைக்கழகமும் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.
நவம்பர் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடக்க இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகமும், நவம்பர் 9-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடக்க இருந்த சென்னைப் பல்கலைக்கழகமும் ஒத்திவைத்தன.
பின்னர், வியாழக்கிழமையோடு (நவ. 19) தொடர் மழை நின்றது. அதன் பிறகு ஆங்காங்கே லேசான மழை பெய்து வந்தது. இதனால், திங்கள்கிழமை (நவ. 22) முதல் வழக்கம்போல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழகங்கள் அறிவித்தன.
சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக, அடுத்து வரும் பருவத் தேர்வுகளையும் பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டன.
அண்ணா பல்கலைக்கழகம்: நவம்பர் 23 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள பல்கலைக்கழக துறைகள், அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்குமான பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகம்: திங்கள்கிழமையன்று நடக்க இருக்கும் பருவத் தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்து வரும் பருவத் தேர்வுகளையும் ஒத்தி வைப்பதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பது திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தாண்டவன் கூறினார்.