தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வாக உள்ளார். திமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.
திமுக எம்.பி. செல்வகணபதி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த காலி இடத்திற்கு தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தது. அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான திமுகவும், தேமுதிகவும் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 3 சுயேட்சை உறுப்பினர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அவர்களது மனுவை எந்த எம்.எல்.ஏக்களும் வழிமொழியாததால் அந்த மனுக்கள் தள்ளுபடி ஆகிவிடும். வேட்புமனு தாக்கலுக்கான தேதி நேற்றுடன் முடிந்ததால், அதிமுகவின் நவநீதகிருஷணன் போட்டியின்றி தேர்வு ஆவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாநிலங்களவை அதிமுகவுக்கு ஒரு எம்.,பி. அதிகமாகிறது.